சென்னை: அரசி அட்டைதாரர்கள் உள்பட பல ரேசன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு கிடையாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பல பகுதிகளில் பொதுமக்கள் ரேசன் கடை ஊழியர்களிடமும், டோக்கன் வழங்குபவர்களிடமும் தகராறில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், திமுக அரசுமீது பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.
பொதுமக்களின் கோபத்துக்கு பணிந்த திமுகஅரசு, அனைத்து ரேசன்கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15ந்தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசு பொருட்கள் தரமில்லை என்று குற்றம் சாட்டப்பட்துடன், பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த ஆண்டு அரசி, சர்க்கரை, கரும்பு மட்டுமே பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தது.
ஆனால், பொங்கல் பரிசுடன் ரொக்கப்பணம் வழங்ககாதது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ.1,000 வழங்க வேண்டும் என எதிர்கட்சி உள்பட பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.1,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
அதன்படி, அரிசி அட்டை வைத்திருக்கும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை பணியாளர்கள் மற்றும் சர்க்கரை அட்டைதாரர்கள், எந்த பொருளும் இல்லாத (வெள்ளை அட்டை) அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு கிடையாது என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது அரிசி அட்டைதாரர்களைத் தவிர்த்து சர்க்கரை அட்டைதாரர்கள், மகளிர் உரிமைத் தொகை பெறும் நபர்கள் மற்றும் வெள்ள நிவாரணத் தொகையாக 6 ஆயிரம் ரூபாய் பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கு பொங்கல் பரிசு டோக்கன் வழங்கவில்லை என புகார்கள் எழுந்தது. பல இடங்களில் ரேஷன் கடை ஊழியர்களிடம் மக்கள் வாக்குவாதம் செய்யும் சம்பவமும் அரங்கேறியது. மேலும் அரசு நிவாரண உதவி பெறுபவர்களுக்கு, நடுத்தர குடும்ப சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் என அனைவருக்கும் இது போன்ற தமிழக அரசின் சலுகைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், அரிசி அட்டை வைத்திருப்பவர்களில் அதிக ஊதியம், மாநில மத்திய அரசு ஊழியர்களும் உள்ளனர். அவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. சர்க்கரை அட்டை வைத்திருக்கும் ஒரே காரணத்தினால் அரசின் அனைத்து சலுகைகளும் புறக்கணிக்கப்படுவதாகவும், ரேஷன் அட்டையை வைத்து ஒரு குடும்பத்தின் நிலையை எப்படி நிலையை எப்படி கணக்கீடு செய்கிறார்கள் எனவும் பல புகார்கள் எழுந்துள்ளது. ஆகையால், இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கைகள் வலுத்து வந்தது. இதுதொடர்பான வீடியோக்களும் சமுக வலைதளங்களில் வைரலானது. ஏராளமான பொதுமக்கள் திமுக அரசின் அறிவிப்பு குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.
இதனால் பயந்த திமுக அரசு, தற்போது, அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் என அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு, தற்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:
பார்வை ஒன்றில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்பு வழங்க நிர்வாக அனுமதி வழங்கி, நிதி ஒப்பளிப்பு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டன. பார்வை இரண்டில் படிக்கப்பட்ட அரசாணையில் திருத்தங்கள் வெளியிடப்பட்டன.
பார்வை மூன்றில் படிக்கப்பட்ட அரசாணையில், தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றுடன் சேர்த்து ரொக்கத் தொகை ரூ.1,000 வழங்க நிர்வாக அனுமதி வழங்கி, நிதி ஒப்பளிப்பு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டன.
முதலமைச்சர் நேற்று (ஜன.9) வெளியிட்ட அறிவிப்பிற்கிணங்க, 2024ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை தமிழ்நாடு மக்கள் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சக்கரை மற்றும் முழுக்கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கத்தொகை ரூ.1,000 சேர்த்து வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் (2,19,51,748) மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு (19,365) என மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 71 ஆயிரத்து 113 குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கத் தொகை ரூ.1,000 வழங்கப்படும்
இதனால் அரசுக்கு ரூ.24,36,18,77,690 (இரண்டாயிரத்து நானூற்று முப்பத்து ஆறு கோடியே, பதினெட்டு லட்சத்து, எழுபத்து ஏழாயிரத்து அறுநூற்று தொண்ணூறு ரூபாய்) செலவினம் ஏற்படும். மேலும், பார்வை ஒன்றில் கண்ட அரசாணையில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.238,92,72,741 (ரூபாய் இருநூற்று முப்பத்து எட்டு கோடியே தொண்ணூற்று இரண்டு இலட்சத்து, எழுபத்து இரண்டாயிரத்து, எழுநூற்று நாற்பத்து ஒன்று மட்டும்)
மற்றும் பார்வையில் மூன்றில் கண்ட அரசாணையில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1828,05,98,062 (ரூபாய் ஆயிரத்து எண்ணூற்று இருபத்து எட்டு கோடியே ஐந்து இலட்சத்து தொண்ணூற்று எட்டாயிரத்து அறுபத்து இரண்டு) ஆக மொத்தம் 206698,70,803 தொகையில் மீதித் தொகை ரூ.389,20,06,887-க்கான நிர்வாக அனுமதி வழங்கி நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது. இந்த செலவினம் 2023 – 2024 வரவு செலவு திட்ட மதிப்பீட்டிலிருந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.