டில்லி
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் புதியவர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க பாஜக முடிவு செய்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளன. இரண்டு முறை தொடர்ந்து ஆட்சி செய்யும் பாஜக 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்கத் தீவிரம் காட்டி வருகிறது. எனவே பாஜக தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இன்று டில்லியில் பாஜக மூத்த தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் சுனில் பன்சால், மத்திய அமைச்சர்கள் பூபேந்தர் யாதவ், அஷ்வினி வைஷ்ணவ, மன்சுக் மாண்டவியா மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் வரும் தேர்தலில் புதுமுகங்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. சுமார் 100 மூத்த நிர்வாகிகளுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது எனக் கூறப்படுகிறது.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எப்படியும் தோற்கடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்தியா கூட்டணியின் தேர்தல் பணிகள் தொடர்பாகக் கட்சியின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.