திருவள்ளூர்: குழந்தைகள் மீது பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 5 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
திருவள்ளூர் அருகே சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் மதிய உணவு அருந்தும் போது அவர்கள்மீது கட்டிடத்தின் ஓடுகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், மதிய உணளவு சாப்பிட்டுக்கொண்டிருந்த 5 குழந்தைகளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் 21 ஆயிரத்து 136 ஒன்றிய மற்றும் நடுநிலை தொடக்கப் பள்ளிகளின் வகுப்பறைகளைக் கட்டவும், மேம்படுத்தவும், தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு ரூ. 240 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், நடப்பாண்டில் ரூ. 800 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், பள்ளிகள் முறையாக பராமரிக்கப்படாமலே இருந்து வருகிறது. பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் பணம் அரசியல்வாதிகள், காண்டிராக்டர்கள் மற்றும் ஆசிரியர்களால் சூறையாடப்பட்டு வருகிறது. இதனால் பள்ளிகள் எப்போதும் போல பாழடைந்த நிலையிலேயே பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முறையான பராமரிப்பு இன்று ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வருகிறத. இந்த பள்ளியை மேம்படுத்த பலமுறை மனு கொடுத்தும் இன்றுவரை சீரமைக்கப்பட்டவில்லை. இந்த நிலையில்தான் இன்று மதியம் பள்ளி குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது, பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 5 குழந்தைகளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காயமடைந்த குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் பள்ளியில் கூடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்த பள்ளியின் கட்டடிம் உடனே கட்டப்பட வேண்டும் என்றும், படுகாயமடைந்த குழந்தைகளுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடத்தைக் கடந்த ஆண்டும் அரசு கண்டு கொள்ளவில்லை. இந்த ஆண்டும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இது போன்ற, கட்டங்களின் உறுதி தன்மை கண்காணிப்பது யார்? அதற்குப் பொறுப்பு ஏற்பது யார்? குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்ன உறுதி ? அலட்சியத்திற்கு யார் காரணம்? என சமூக ஆர்வலர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், திருவள்ளூர் மாவட்டம் சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளிக் கட்டிடத்தின் ஓடுகள் இடிந்து விழுந்து, ஐந்து குழந்தைகள், தலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
முன்னதாக, மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மாணவ மாணவியர் மீது, மரம் வேரோடு சரிந்து விழுந்ததில், 17 மாணவ மாணவியர் காயமடைந்தனர் என்ற செய்தியும் காண நேர்ந்தது. அனைவரும் விரைந்து நலம் பெற வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழகம் முழுவதும் உள்ள 10,000 சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. பல முறை அவை குறித்துக் கேள்வி எழுப்பியும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எந்த விளக்கமும் அளித்ததாகத் தெரியவில்லை.
குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவதை எப்படி அனுமதிக்க முடியும்? இந்த 10,000 பள்ளிக் கட்டிடங்கள் எவை எவை, இவற்றில் எத்தனை பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன, சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடங்களுக்குப் பதிலாக, மாற்று இடங்களில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனவா என்பதை, பொதுமக்களுக்குத் தெரிவிக்க திமுக அரசு கடமைப்பட்டுள்ளது.
உடனடியாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிகளுக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்க, குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்துச் செயல்பட வேண்டும் என்றும், இவை குறித்த விவரங்களை, பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பில் சார்பாக வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.