சென்னை: “அண்மையில் பெய்த மழை கிட்டதட்ட 47 வருடங்களாகப் பார்க்க முடியாத, வரலாறு காணாத மழை என இன்று நடைபெற்ற திருமண விழாவில் கலந்தகொண்டு சிறப்புரை ஆற்றயி முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
சென்னையில், அம்பத்தூர் மண்டல குழுத் தலைவர் திரு.மூர்த்தி அவர்களின் மகனும் அரசு வழக்கறிஞருமான அபிஷேக் மூர்த்தி – டாக்டர் எம். மனோதர்ஷ்னி ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது, “அண்மையில் பெய்த மழை கிட்டதட்ட 47 வருடங்களாகப் பார்க்க முடியாத, வரலாறு காணாத அளவிற்கு பெய்திருக்கக்கூடிய மழை. அந்த மழை வருவதற்கு 4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை செய்தார்கள். ஆனால் எச்சரிக்கை செய்தது எல்லாம் மீறி இதுவரை 47 வருடங்களாகப் பார்க்காத மழையை நாம் பார்த்தோம்.
எப்போதும், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரைக்கும் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி மக்களுக்காகப் பாடுபடக்கூடிய கட்சி. நாம் பலமுறை ஆட்சியில் இருந்திருக்கிறோம். பலமுறை ஆட்சியில் இல்லாமல் இருந்திருக்கிறோம். ஆட்சியில் இருக்கும்போது இப்படிப்பட்ட பேரிடரைச் சந்தித்திருக்கிறோம். ஆட்சியில் இல்லாத நேரத்தில் சந்தித்திருக்கிறோம்.
ஆட்சியில் இருக்கின்ற நேரத்திலாவது, அந்த அதிகாரம், அந்த வசதிகள், மீட்பு நேரத்தில் ஈடுபடக்கூடிய கருவிகள், அவைகள் எல்லாம் நமக்கு சுலபமாகக் கிடைத்து விடும், அதைப் பயன்படுத்தி, அந்தப் பணிகளை எல்லாம் நிறைவேற்றிக்கொள்ள முடியும். ஆனால் ஆட்சியில் இல்லாத நேரத்தில், நாம் சந்தித்த பேரிடரில் எப்படியெல்லாம் அந்தக் களத்தில் இறங்கியிருந்தோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
உதாரணமாக, கொரோனா என்ற கொடிய நோய் வந்தது. அந்தக் கொடிய நோய் வந்தபோது எவ்வளவு பேரை இழந்தோம். எப்படிப்பட்ட கொடுமைகளுக்கெல்லாம் ஆளாக்கப்பட்டோம், பொருளாதாரம் எந்தளவுக்குச் சீர்குலைந்து போனது. வெளியில் நடமாட முடியாத நிலை. வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலை. தொழிலுக்குப் போகமுடியவில்லை, வேலைக்குப் போகமுடியவில்லை, பள்ளிக்கூடத்திற்கு போகமுடியவில்லை. கடைக்குச் சென்று உணவு வாங்குவதற்கான அந்த வசதி கூட இல்லாத ஒரு கொடுமையான சூழ்நிலை. அந்த நேரத்தில், அரசாங்கம் என்ன செய்யவில்லை, என்ன செய்திருக்கவேண்டும், அதைப் பற்றியெல்லாம் பேச நான் விரும்பவில்லை. இப்போது அது தேவையில்லை.
திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு எதிர்க்கட்சியாக இருக்கும்போது, “ஒன்றிணைவோம் வா” என்ற தலைப்பில் ஒரு அறிவிப்பு வெளியிட்டு, அந்த ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்கு, வாழ்வாதாரத்தைத் தவித்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த மக்களுக்கு உண்ண உணவு, இருப்பதற்கு இருப்பிடம், உடுக்க உடை, மருத்துவ வசதி, தேடித் தேடிச் சென்று அவர்களைத் தொடர்பு கொண்டு நாமாக முன்கூட்டியே தேடித் தேடிச் சென்று அவர்களுக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் செய்த கட்சிதான் இன்றைக்கு கம்பீரமாக சொல்லமுடியும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் இயக்கம்.
இங்கே குறிப்பிட்டுப் பேசினார்கள், ஏற்கனவே, 2015-ஆம் ஆண்டு ஒரு வெள்ளம் வந்தது. அதனால் நான் அதிகம் பேச விரும்பவில்லை. அப்போது அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள். அப்போதும் எச்சரிக்கை விடப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. செம்பரம்பாக்கம் ஏரியை நிரம்பவிடக் கூடாது. அப்படி ஒரு சூழ்நிலை வருகின்றபோது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணிரைத் திறந்து அதை வெளியேற்றினால்தான் ஆபத்தைத் தடுக்க முடியும், வெள்ளத்தைத் தடுக்கமுடியும். அதனைத் திறந்து விடுவதற்கு அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்.
அரசு நடத்தக்கூடியவர் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள். அவரிடத்தில் அனுமதி கேட்கக்கூட அதிகாரிகள் பயந்தார்கள். அப்படி ஒரு கொடுமையான நிலை அன்றைக்கு இருந்தது. அதிகாரிகள் சென்று அனுமதி கேட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீரை திறந்துவிட்டிருந்தால் அந்த ஆபத்து நிச்சயமாக வந்திருக்காது. நூற்றுக்கணக்கானவர்களை அன்றைக்கு நாம் இழந்தோம். இன்னும் சிலவற்றிக்குக் கணக்கே இல்லை. அப்படிப்பட்ட ஒரு நிலைமை ஏற்பட்டது. ஆனால் அதைவிட மோசமான நிலையில், வரலாற்றிலேயே காணமுடியாத இந்தச் சூழ்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை நிரம்பவிடாமல், கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீரைத் திறந்துவிட்டு, சென்னை சந்திக்க இருந்த ஒரு பெரும் வெள்ளத்திலிருந்து மீட்ட அரசுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
இப்போது வந்த மழையில் அரசு வரிந்துகட்டிக் கொண்டு முனைப்போடு, பல நலத் திட்ட உதவிகளை, நிவாரணப் பணிகளில் எப்படியெல்லாம் ஈடுபட்டது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதற்கு ஈடாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட கட்சி எது என்றால், அது நம்முடைய கட்சி. அனைத்து அமைச்சர்களும் வெள்ளம் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு சென்றார்கள். அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த அத்தனை தோழர்கள் அத்தனை பேரும், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் அத்தனை பேரும் சென்றிருந்தார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணை நின்றார்கள். கை கொடுத்தார்கள். அதனால்தான் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
ஆனால், அன்றைக்குப் பலர் உதவி செய்கிறோம் என்று சொல்லி, அந்த உதவிப் பொருட்களை எல்லாம் வேன், லாரி, பஸ்ஸின் மூலமாக அனுப்பி வைத்தார்கள். அதில் அனுப்பி வைக்கும்போதுகூட அம்மையார் ஜெயலலிதா அவர்களின் ஸ்டிக்கரை அதிமுக என்று ஒட்டி அனுப்பி வைத்தார்கள். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சிப் பாகுபாடில்லாமல், யாராக இருந்தாலும் அவர்களுக்குத் துணை நின்ற ஒரு கட்சியாக, துணை நின்ற ஒரு ஆட்சியாக இன்றைக்கு கழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது.
பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்குக் குறிப்பாகச் சென்னையைப் பொறுத்தவரையில் முழுமையாகவும், சென்னையை ஒட்டியுள்ள, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் எங்கெங்கு பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய அந்தப் பகுதிகளுக்கு, யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் அத்தனை பேருக்கும் நிச்சயமாக, உறுதியாக 6000 ரூபாய் வழங்கப்படும். எப்படி மகளிர் உரிமைத் தொகையை தகுதியுள்ளவர்கள் அத்தனை பேருக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவித்து, அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோமோ, அதேபோல இந்த 6000 ரூபாய் தகுதியுள்ள அத்தனை பேருக்கும் நிச்சயமாக, உறுதியாக வழங்கப்படும் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, இப்போது கூட நான் சீக்கிரமாகச் செல்லவேண்டும்.
ஒன்றிய அரசிடமிருந்து ஒரு குழு வந்திருக்கிறது. மூன்று நாட்களாக வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். மூன்று நாட்களாக ஆய்வு செய்து கொண்டிருக்கக்கூடிய அதிகாரிகள் கூட, நீங்கள் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பார்த்திருப்பீர்கள். இந்த வெள்ளச் சேதத்தை மிக சாமர்த்தியமாகத் தமிழ்நாடு அரசு கையாண்டிருக்கிறது. அரசியல் ரீதியாக ஒன்றிய அரசோடு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் மறந்து ஒன்றிய அரசிடமிருந்து வந்து இங்கே ஆய்வு செய்திருக்கக்கூடிய அதிகாரிகள் அத்தனை பேரும் தமிழ்நாடு அரசை மனதாரப் பாராட்டியிருக்கும் செய்தியை நாம் பார்க்கிறோம். இன்றைக்கு இன்றுடன் முடித்து கடைசியாக, காலை 11.15 மணிக்கு என்னைச் சந்திக்கக் கோட்டைக்கு வரவிருக்கிறார்கள். அவர்களுடன் நானும் கலந்து பேசவிருக்கிறேன். எப்படி தமிழ்நாட்டு மக்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத நேரத்திலும் சரி, இப்போது ஆட்சியில் இருக்கின்ற நேரத்திலும் சரி எப்படி துணைநிற்கிறதோ, அது தொடர்ந்து நிற்கும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, இன்றைக்கு மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் பெற்றுச் சிறப்போடு வாழவேண்டும்.
புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும் “வீட்டிற்கு விளக்காக… நாட்டிற்குத் தொண்டர்களாய்” இருந்து வாழுங்கள்… வாழுங்கள். அதே நேரத்தில், ஒரு பணிவான வேண்டுகோள் அல்ல, ஒரு கண்டிப்பான வேண்டுகோள்.
மணமக்களான உங்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள், சூட்டுங்கள், என்று கேட்டு, வாழ்க மணமக்கள்… வாழ்க மணமக்கள்… விடைபெறுகிறேன் ”
இவ்வாறு கூறினார்.