டில்லி

டில்லி அரசு காற்று மாசுபாட்டைக் குறைக்க உதவுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த சில வாரங்களாக டில்லியில் காற்றின் தரம் மோசம் அடைந்து காணப்பட்டது. காலையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள், வாகனங்களில் சென்றவர்கள் என பல்வேறு தரப்பினரும் இதனால் பாதிப்படைந்தனர் டில்லியில் காற்றின் தரம் இன்று காலை மிக மோசம் என்ற அளவில் இருந்தது.

அதாவது காற்று தர குறியீடு 323 ஆக இருந்தது. டில்லி ஐ.ஐ.டி.யில் காற்று தர குறியீடு 321 ஆகவும், விமான நிலையம் (முனையம் 3) பகுதியில் 336 ஆகவும் மற்றும் பூசா பகுதியில் 337 ஆகவும் இருந்தது.

டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய்

”கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வேளாண் கழிவுகளை எரிப்பது 50 சதவீதம் அளவுக்குப் பஞ்சாப் அரசால் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு டில்லியில், காற்றின் தரம் கடுமையான என்ற நிலையில் இருந்தது. தற்போது காற்றின் தரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த முன்னேற்றம் வரும் நாட்களில் மேம்படும். 

டில்லி அரசால் விதிகளை முறையாக அமல்படுத்துவது மற்றும் கண்காணிப்பதற்காகச் சுற்றுச்சூழல் சிறப்பு செயலாளர் தலைமையின் கீழ், 6 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப் படை ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.  ஆயினும், காற்று மாசுபாட்டைக் குறைக்க மக்கள் உதவ வேண்டும். ஒவ்வொரு விசயத்திலும் அரசு கண்காணிப்புடன் செயல்பட்டு வருகிறது

என்று கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை டில்லியில் காற்றின் தரம் மேம்பட்டதால் பி.எஸ்.-3 மற்றும் பி.எஸ்.-4 பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் தவிரப் பிற லாரிகள் மற்றும் பேருந்துகள் நகருக்குள் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு கட்டுமான நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.