டில்லி

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் இண்டிகோ விமான நிறுவனம் தேர்தல் விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

விரைவில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இம்மாநிலங்களில் கடந்த மாதம் 9-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.  இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷின் எக்ஸ் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில்,

“நான் கடந்த வாரம் டில்லியில் இருந்து மிசோரம் மாநிலத்தின் அய்ஸ்வால் நகருக்கு இண்டிகோ விமானத்தில் சென்றுவிட்டு திரும்பினேன். அந்த இருவழிப் பயணத்திலும் அந்த விமான சிப்பந்திகள் குழு, விமானத்தில் வெளியிட்ட அறிவிப்பில், வழக்கமான, முக்கியமில்லாத ஒன்றுக்காகப் பிரதமர் மோடியைப் புகழ்ந்தது. 

மற்றொரு அறிவிப்பில், நடைபெறவிருக்கிற மாநிலச் சட்டசபைத் தேர்தலில் பயணிகள் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இவை எல்லாமே தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகும். 

சத்தீஷ்கார் மாநிலத்தின் ராய்ப்பூருக்கு நேற்று மற்றொரு விமானத்தில் சென்றபோது அந்த விமானத்தில் இதுபோன்ற எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.  எனவே சில நிறுவனங்களாவது மோடி அரசின் அழுத்தத்துக்கு உட்படாமல் இருப்பதும், சரியான நடைமுறையைப் பின்பற்றுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது” 

என்று பதிவிட்டுள்ளார்.