சென்னை எழும்பூர் ரயில்நிலையம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில், டிராவல்ஸ் மேலாளரிடம் இருந்து கத்திமுனையில் ரூ. 30 லட்சத்தை மூன்று பேர் சேர்ந்த கும்பல் பறித்து சென்றுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பி.கே.எஸ். மொபைல் மற்றும் மணி டிராவல்ஸ் நடத்தி வருபவர் பெரியய்யா. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இவரிடம் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இவரது உறவினர் சக்திவேல் (43) பணிபுரிந்து வருகிறார்.
நெற்குன்றம் ஜெயராம் நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் சக்திவேல் டிராவல்ஸ் மற்றும் செல்போன் கடையின் மேலாளராக இருந்துள்ளார். இங்கு வசூலாகும் பணத்தை தினமும் வங்கியில் சென்று மொத்தமாக டெபாசிட் செய்துவந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 7 ம் தேதி இரவு டிராவல்ஸ் மற்றும் செல்போன் கடையில் வசூலான ரூ. 28 லட்சத்தை சக்திவேலிடம் கொடுத்த பெரியய்யா பாரிமுனையில் ஒருவரிடம் இருந்து தனக்கு வரவேண்டிய ரூ. 2 லட்சத்தையும் வாங்கி காலையில் வங்கியில் டெபாசிட் செய்துவிடும்படி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாரிமுனை சென்று 2 லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்டு மொத்தம் ரூ. 30 லட்சத்துடன் இரவு 8:25 மணிக்கு மோட்டார் பைக்கில் திரும்பிவந்த சக்திவேலிடம் தினத்தந்தி அருகே உள்ள ஆன்ட்ரூ சர்ச் சிக்னல் அருகே சாலையில் நின்ற போது அங்கு வந்த 3 பேர் கத்திமுனையில் சக்திவேலிடம் இருந்து ரூ. 30 லட்சத்தை பறித்துச் சென்றனர்.
பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழிப்பறி சம்பவத்தை அடுத்து அவர்களை துரத்திச் சென்ற சக்திவேலை பிடித்து தள்ளிய அந்த நபர்கள் தொடர்ந்து வந்தால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் உயிருக்கு பயந்த சக்திவேல் நடந்த சம்பவத்தை பெரியய்யா-விடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து எழும்பூர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து 2 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள இந்த பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழிப்பறி சம்பவத்தைத் தொடர்ந்து காந்தி இர்வின் சாலையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவாயிலைப் போல 24 மணி நேரமும் ரயில்கள் வந்து செல்லும் எழும்பூர் ரயில்நிலையத்தின் மற்றொரு நுழைவாயிலான பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கமும் பயணிகளுக்கு தேவையான வசதிகளுடன் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.