டில்லி

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நாடு முழுவதும் 10000 புதிய மின் பேருந்துகளை அறிமுகம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பல்வேறு முடிவுகள், முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்,

 ‘பிரதமரின் மின்சார பஸ் சேவை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு 57 ஆயிரத்து 613 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 10 ஆயிரம் புதிய மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இத்திட்டத்தை அரசு மற்றும் தனியார் கூட்டாக இணைந்து செயல்படுத்த உள்ளது. மொத்தம் 57 ஆயிரத்து 613 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கும். இத்திட்டம் 3 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் அமல்படுத்தப்படும்’

என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,

”நாட்டில் கைவினை பொருட்களின் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமரின் விஸ்வர்மா திட்டத்தின் கீழ் கைவினை கலைஞர்களுக்கு 5 சதவிகித வட்டியில் 1 லட்ச ரூபாய் வரை கடன் உதவி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு அமைச்சரவை 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது’

என்று அறிவித்துள்ளார்.