டில்லி

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

 

இன்றைய நாள் முழுவதும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. எனவே சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை காலை 11 மணிக்கு இரு அவைகளும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து விவாதம் நடத்த அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கையை முன்வைத்தார். எதிர்க்கட்சிகள் இதனை நிராகரித்தன.

பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இந்த தொடர் அமளி காரணமாக மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டார்.

இன்று மக்களவையில் முக்கியமான சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இங்கும் மணிப்பூர் தொடர்பாகப் பிரதமர் பதிலளிக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. அமளி தொடர்ந்ததால் மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.