டில்லி
ரூ.2000 நோட்டுக்களில் 88% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 19ம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும் மே மாதம் 23ம் தேதியிலிருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இதையொட்டி, வங்கி மூலம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள சில வரம்புகள் அறிவிக்கப்பட்டன., ஒருவர் 20 ஆயிரம் என்ற அளவில் எத்தனை முறை வேண்டுமானாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றலாம் என்றும் அதற்கு அடையாள ஆவணமோ, சீட்டோ தேவையில்லை எனவு, ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
அறிவிப்பு வெளியான நாளில் இருந்து புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் சுமார் 75% திரும்ப பெறப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. தற்பொழுது நாட்டில் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் சுமார் 88% நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதாவது ஜூலை 31-ம் தேதி வரை ரூ.3.14 லட்சம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. கடந்த 2018-19 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.