சென்னை

மிழக ஆளுநர் ஆர் என் ரவியை திரும்பப் பெறக் கோரி மதிமுக கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி உள்ளது.

குடியரசுத் தலைவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும்பப் பெறக்கோரி வலியுறுத்தும் வகையில் ம.தி.மு.க. சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கியது. இன்று சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடந்த கையெழுத்து இயக்கத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கையெழுத்து படிவத்தில் முதல் கையெழுத்திட்டுத் தொடங்கி வைத்தார். அவருடன் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ, மாவட்டச் செயலாளர்கள் கழககுமார், ஜீவன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் வைகோ தனது உரையில், 

”ஆர் என் ரவி தமிழக வரலாற்றில் எந்த ஆளுநரும் செய்யாத அக்கிரமங்களை, அநியாயங்களைச் செய்து வருகிறார். அவர் அரசு தயாரித்துத் தந்த ஆளுநர் உரையை மாற்றி பேசி பெரியார், அண்ணா, அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பெயரை வாசிக்காமல் அவமதிப்பு செய்தார்.

மேலும் சட்ட மசோதாக்களை வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறார்.  தவிர மார்க்சிஸம் காலாவாதியாகிவிட்டது என்றார். மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு எதிர்க் கருத்து தெரிவிக்கிறார்.

தமிழக அரசுக்கு நம்பர் ஒன் விரோதியாகச் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியலமைப்பு சட்டத்துக்கும் விரோதியாகச் செயல்படுகிறார்.  எனவே அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி 1 கோடி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறோம். மதிமுகவினர் மக்களைத் தேடிச் சென்று கையெழுத்து பெற்று, குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார்கள்.”

என்று தெரிவித்துள்ளார்.