சென்னை: கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம்ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று, உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி பல லட்சம் மக்களையும் காவுவாங்கியது. இதைத்தடுக்க தடுப்பூசி ஒன்றே இலக்கு என பல நிறுவனங்களின் தடுப்பூசிகள் உலக மக்களுக்கு செலுத்தப்பட்டன. இந்தியாவில், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் இல்லை என கூறப்பட்டாலும், சமீப காலமாக பல்வேறு புதிய நோய்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மாரடைப்பு நோய், அனைத்துதரப்பினருக்கும் வருகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கோவையில் நடைபெற்ற இந்திய இருதய அறுவை சிகிச்சை சங்கத்தின் 69வது வருடாந்திர கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மா.சுப்பிரமணியன், கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரித்து வருவதால் அது தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமென இதய சிகிச்சை நிபுணர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்திய இருதய அறுவை சிகிச்சை சங்கத்தின் 69வது வருடாந்திர கருத்தரங்கம் கோவையில் நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது, 2008-க்கு பிறகு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இருதய மாற்று அறுவை சிகிச்சை உட்பட பல மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது.
புற்றுநோய் சிகிச்சையில் மிக சிறப்பாக பங்களித்து வரும் ஜப்பான் சென்று, அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் உட்பட உயர் அதிகாரிகளுடன் உதவியுடன் நேரடியாக அந்த சிகிச்சையை முறைகளையும் பார்த்து வந்துள்ளோம். அந்நாட்டில் செயல்படுத்தி வரும் Health walking என்ற திட்டம் மாரடைப்பை குறைக்க அவசியம் என்ற அடிப்படையில், தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் Health walking திட்டத்தை கொண்டு வர முதல்வரிடம் கோரிக்கை வைத்து செயல்படுத்த உள்ளோம்.
கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரித்து வருவதால் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமென இதய சிகிச்சை நிபுணர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இளைஞர்களிடையே உடற்பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாள்தோறும் நான் ஓடி வருகிறேன்.
இவ்வாறு கூறினார்.
இனி எந்தவொரு இந்தியருக்கும் தடுப்பூசி அவசியமில்லை! இந்திய வம்சாவழி மருத்துவ நிபுணர் தகவல்…