பழனி:
முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பழனி அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். கும்பாபிஷேகத்திற்கு பிறகு அவர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடந்த ராஜகோபுரம், தங்ககோபுரம் மற்றும் உப சன்னதிகளில் வழிபட்டு சென்றனர்.

பழனி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூச திருவிழா முக்கிய சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவிற்காக மதுரை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருது நகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு வருகை தருவார்கள்.

கும்பாபிஷேக நிகழ்ச்சியால் பக்தர்கள் வருகை கடந்த சில நாட்களாக குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் பழனி நோக்கி பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தைப்பூச திருவிழா இன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கிழக்கு ரதவீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.