பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலகக் கோரி வினேஷ் போகத், ஷாக்சி மாலிக், சங்கீத போகத், பஜ்ரங் புனியா, சோனம் மாலிக் ஆகியோர் தலைமையில் மல்யுத்த வீரர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று அரசியல் கட்சியினர் கலந்துகொண்ட நிலையில் இதை அரசியலாக்க வேண்டாம் என்று கூறி போராட்டக் குழுவினர் அவர்களை வெளியேற்றினர்.
பின்னர், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மல்யுத்த வீராங்கனையும் பாஜக-வைச் சேர்ந்தவருமான பபிதா போகத் போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று அரசு சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து நேற்று நள்ளிரவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து இன்றும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், குத்துச் சண்டை வீரரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான விஜேந்திர சிங் குஸ்தி வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்.
விஜேந்திர சிங் காங்கிரஸ் கட்சியில் இனைந்து செயல்பட்டு வருவதால் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தனியாக அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த சூழலில் பாஜக எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் போராட்டம் காரணமாக தான் பதவி விலகப்போவதில்லை என்றும் அரசியல் காரணங்களுக்காக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
At jantar mantar #BoycottWFIPresident #fullsupport pic.twitter.com/c8S17S7Gbv
— Vijender Singh (@boxervijender) January 20, 2023
மேலும், இது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். முன்னதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் இது தொடர்பாக இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.