தஞ்சாவூர்: டெல்லியைப் போல குடிசை, பஜார் பகுதிகளில் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வரும் மருத்துவமனைகள் அடுத்த மாதம் திறந்து வைக்கப்படும்  என்றும், எம்ஆர்பி மூலம் பனி நியமனம் செய்யும்போது ஏற்கனவே பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரிலக்கத்தில் மட்டுமே உள்ளது. நேற்று 4000 பேருக்கு பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு மட்டுமே தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தஞ்சாவூரில்பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  டெல்லியில் உள்ளது போல தமிழகத்தில் குடிசை, பஜார் பகுதிகளில் நான்கு பணியிடங்களுடன் கூடிய 708 மருத்துவமனைகள் கட்டப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் நடைபெற்று கொண்டுள்ளது.  அடுத்த மாதம் முதல் வாரத்தில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை சென்னையில் இருந்து திறந்து வைப்பார் என்றார்.

செவிலியர்களின் போராட்டம் குறித்த கேள்விக்கு, எம்.ஆர்.பி. செவிலியர்கள் 4308 பேர் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. கொரோனா காலத்தில் பணியாற்றிய எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம் ஆகிய பிரிவுகளில் 128 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் . அவர்களுக்கான பணி நியமன ஆணையை விரைவில் முதல்-அமைச்சர் வழங்குவார். எம்.ஆர்.பி. மூலம் செவிலியர்கள் எடுக்கும் போது ஏற்கனவே பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

ரத்த ஓவியம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ரத்தத்தை எடுத்து ஓவியமாக வரைந்து காதலர்கள், நண்பர்களுக்கு பரிசளிப்பது தடை செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் அவ்வாறு செயல்பட்ட நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து பேசியவர்,  கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து உள்ளதா? என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி முழுமையாக முடிந்த பிறகே அது பற்றி கூற முடியும்.‘ அது ஒருபுறம் இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பை வெகுவாக தடுக்க முடியும். தினமும் நடைபயிற்சி, ஓட்ட பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரிலக்கத்தில் மட்டுமே உள்ளது. நேற்று 4000 பேருக்கு பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு மட்டுமே தொற்று உள்ளது கண்டறியப் பட்டுள்ளது. ஒமைக்ரான் உருமாற்றம் சீனாவில் தொடங்கி ஜப்பான் உள்பட 6 நாடுகளில் பரவி உள்ளது. தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் பரவமால் தடுக்க முதல்மைச்சர் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் 100 சதவீதம் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் மற்ற வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் ரேண்டம் முறையில் பரிசோதிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தன்மை குறைந்து தான் உள்ளது. முக கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ளது. தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. முக கவசம் அணிவது நல்லது.

இவ்வாறு கூறினார்.