சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னையில் இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காணும் பொங்கலையொட்டி வண்டலூர், கிண்டி பூங்காக்கள் போன்ற சுற்றுலா தலங்கள் இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று காணும்பொங்கலை முன்னிட்டு, சென்னைவாசிகள் கடற்கரை உள்பட சுற்றுலா ஸ்தலங்களுக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று தங்களது மகிழ்ச்சிகளை பகிர்ந்துகொள்வது வழக்கம். இதனால், சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் கூட்டம் அலைமோதும். இதையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக, சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.
அதன்படி, மாமல்லபுரம், கோவளம், வண்டலூர், பெசன்ட் நகர் உள்பட சுற்றுலா பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. சென்னை, புறநகர் பகுதியான வண்டலூர் உயிரியல் மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாகவும் இது திகழ்கிறது. இங்க 180 வகையான இனங்களை சார்ந்த 2 ஆயிரத்து 500 வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். இன்று காணும்பொங்கலை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக வருவார்கள் என்பதால், வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோன்று கிண்டி சிறுவர் பூங்காவும் செவ்வாய்க்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். அந்த பூங்காவும் இன்று திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் பூங்காவில் காணும்பொங்கல் தினமான இன்று பார்வை யாளர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்பதால், 20 டிக்கெட்கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களை சோதனையிடும் வரிசைகளும் 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் வசதிக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பூங்காவுக்கு 150 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் கோரப்பட்டுள்ளது. பூங்காவின் பல்வேறு இடங்களில் சிறப்பு உதவி மையம், மருத்துவ உதவி மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 23 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.