சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு இருமுறை அதாவது 6 மாதங்களுக்கு ஒருமுறை சொத்துவரி செலுத்த வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு சொத்துவரி உயர்த்தப்பட்டதால், பலர் அதிருப்தி காரணமாக சொத்து வரியை கட்டாமல் இழுத்தடித்து வருகின்றனர். மேலும் பல நிறுவனங்களும் பல கோடி சொத்து வரி பாக்கி வைத்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி வருமானமே பிரதானமாக உள்ளது. இதனால் சொத்து வரி வசூலிப்பதில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்கள் மீது ஜப்தி நடவடிக்கி மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து கூறிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள், “சென்னையில் சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்துவோருக்கு, 5% அல்லது 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். அதற்குப் பின், சொத்து வரி செலுத்துவோருக்கு, 2% தனி வட்டி விதிக்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டாதால், தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கு, ஜனவரி 12 வரை மாநகராட்சி அவகாசம் அளித்துள்ளது.
சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்களின் பட்டியல் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இதன்படி ரூ. 25 லட்சத்திற்கு மேல் சொத்து வரி செலுத்ததாத 38 நபர்கள், ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சொத்து வரி செலுத்தாத 140 நபர்கள், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சொத்து வரி செலுத்தாத 321 நபர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மொத்தம் ரூ.66.37 கோடி ரூபாய் சொத்து வரி நிலுவை வைத்துள்ளனர்.
இவர்களைத் தவிர்த்து பலர் இந்த ஆண்டுக்கான சொத்து வரியை செலுத்தாமல் உள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நடப்பு நிதியாண்டில் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு தனி வட்டி விதிக்கப்படும். பல ஆண்டுகளாக நிலுவை வைத்துள்ளவர்களுக்கு முதல் கட்டமாக நோட்டீஸ் வழங்கப்படும். இதையும் மீறி வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த வாரம் முதல் இந்தப் பணிகளை தொடங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது” என்று கூறினர்.