சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு மேலும் கால அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இநத் வழக்கில் இதுவரை 7 பேருக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்க மத்திய, மாநிலஅரசுகள் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, முதல்வராக மறைந்த ஜெயலலிதா இருந்தபோது, 2015ம் ஆண்டு தமிழகத்தில் புகையிலை பொருட்களுக்கு கடந்த தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி குட்கா உள்பட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடைபெற்று வந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், கடந்த 2016ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி முக்கிய பிரமுகர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியை பறிமுதல் செய்தனர். அதில் கிடைத்த தகவலின்படி, அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் மற்றும் ஒன்றிய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் இருந்தது
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே உள்ளன. அமைச்சர் மற்றும் டிஜிபி என்று வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.
அதேபோல இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் உயரதிகாரிகளுக்கும் சிபிஐ போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருவதால் அடுத்தகட்டமாக இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சிபிஐ தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் மற்றும் உயர் அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஜூலை 19ம் தேதி அனுமதி வழங்கியது.
இதையடுத்து, 11 பேருக்கு எதிராக சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் தவறுகளும், பிழைகளும், இருந்ததால் அதை திருத்தம் செய்து சாட்சிகள் குறித்த விவரங்கள் மற்றும் அதனுடைய வாக்குமூலம் குறித்து விவரமாக இணைத்து தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது; இதுவரை 7 பேருக்கு எதிராக மட்டுமே வழக்கை நடத்த மத்திய அரசிடம் இருந்தும் மாநில அரசிடம் இருந்து அனுமதி பெற்றதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிழைகளை முழுவதுமாக திருத்தி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் யார், யாருக்கு எதிராக வழக்கு தொடர ஒப்புதல் கிடைத்துள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜன.10ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதனிடையே இந்த வழக்கிற்கு தொடர்பில்லாமல் முடக்கப்பட்ட அசையா சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி; அந்த வழக்கில் செலுத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாத நிலையில் சொத்துக்களை விடுவிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர்.