மதுரை: முறையாக அனுமதி பெறாமல் தமிழ்நாட்டில் யாரும் சிலை வைக்கக் கூடாது மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டம் அம்மச்சியாபுரத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட இமானுவேல் சேகரன் சிலையை அகற்றி பாதுகாப்பாக வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் ஒரு தரப்பினர் இமானுவேல் சேகரன் சிலை வைத்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த சிலையை அகற்ற அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரி பாலசுப்பிரமணியன், உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவில், சிலை அமைக்கப் பட்டதும் நடைபெற்ற அமைதிக்க பேச்சுவார்த்தையில் அனுமதி பெறும் வரை சிலையை சுற்றி தகரம் அமைத்து மறைத்து வைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி சிலை மறைக்கப்பட்டது. இதனால் சிலையை அகற்ற தேவையில்லை எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் சாதி மோதல்கள் நடைபெற்றுள்ளன. அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனால் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கூடாது என்றார்.
வழக்கறிஞரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், சிலை அமைக்க அனுமதி கோரி மனுதாரர் அளித்த மனுவை அதிகாரிகள் நீண்டநாட்களாக நிலுவையில் வைத்திருப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர். அரசின் இந்த நடவடிக்கையால், போலீஸார்தான் அதிக சிரமத்துக்கு ஆளாகின்றனர் என்று சுட்டிக்காட்டியதுடன், ஏற்கனவே முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கவே நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. முறையாக அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினர்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் முறையாக அனுமதி பெறாமல் யாரும் சிலை வைக்கக் கூடாது. அதை அனுமதிக்கவும் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், இதனால் மனுதாரர் அனுமதி பெறும் வரை சிலையை திறக்கக் கூடாது. அது தொடர்பாக மனுதாரர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணை நவம்பர் 24-க்கு ஒத்திவைத்தனர்.