விருத்தாசலம்: கடலூர் அருகே சாலையோரம் யணியர் நிழற்குடைக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், அதில் விழுந்த 11 வயது மாணவன் பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சாலையோரத்தில், பயணிகள் நிழற்குடை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த நிலையில், அந்த பள்ளத்தில் தவறி விழுந்த  பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உளளது.

சம்பவத்தன்று,  விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள விஜயமாநகரம் புதுவெண்ணைக்குழி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயமூர்த்தி – விஜயகுமாரி தம்பதியரின் 11 வயது மகன் வினோத் என்ற 5 ஆம் வகுப்பு மாணவர், விஜயமாநகரம் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்து,  தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதையறிந்த அந்த பகுதி மக்கள் அந்த சிறுவனை மீட்ட நிலையில், அவர் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பயணியர் நிழற்குடை அமைக்க பள்ளம் தோண்டி பல நாட்கள் ஆகியும், பணியை விரைந்து முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டதும், அதனை சுற்றி தடுப்புகள் அமைக்காததுமே சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணம் என குற்றஞ்சாட்டிய சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மங்கலம்பேட்டை சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.