சென்னை: சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை  பெய்து வருகிறது. இன்னும் சில மணி நேரத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வரும் 10ந்தேதி மற்றும்  11, 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னை உள்பட தமிழ்நாட்டில் பல இடங்களில்  பரவலாக மழை பெய்து வருகிறது.   சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின்  மேல் நிலவுகின்ற கீழ் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரி காரைக்காலில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.   மேலும், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கை கடற்கரையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.   இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் , புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும்,  இதனால் நாளை மறுநாள் கன்னியாகுமரி , திருநெல்வேலி,  தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, விழுப்புரம், கடலூர்,  காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இந்த நிலையில் சென்னையில் இன்று காலையில் பல இடங்களில் பரவலாக மழை விட்டு விட்ட பெய்து வருகிறது.  அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கன்னியாகுமரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய மூன்று மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும்,  கடலூர், திருவள்ளூர், சென்னை, புதுக்கோட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை ,விருதுநகர், நெல்லை ,சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது .

 தென்மேற்கு வங்கக் கடலின் கிழக்கு பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நாளை (9ந்தேதி) மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் நாளை மறுதினம் (10ந்தேதி)   தென்மேற்கு அதை ஒட்டிய மேற்கு வங்க கடல், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை முதல் 11ஆம் தேதி வரை தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியிலும் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் அப்போது கனத்த மழையும் பெய்யும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம்,   மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவித்து உள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கம் காரணமாக,  ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் சூறாவளி காற்று வீசுவதால் கடலில் கொந்தளிப்பும் அதிக நீரோட்டமும் ஏற்பட்டிருக்கிறது.  வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைந்து ராமேஸ்வரம் பாம்பன் தனுஷ்கோடி உள்ளிட்ட தீவுப்பகுதிகளில் சூறாவளி வீசுகிறது.  இதனால் ராமேஸ்வரத்திலும் பாம்பனிலும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சச அலைகள் எழுந்திருக்கின்றன.  அதிக நீரோட்டமும் உண்டாகி இருக்கிறது.

இந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி  வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நவம்பர் 10ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 11, 12 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.