சென்னை: நவம்பர் 5-ம் தேதி முதல் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்து உள்ளது.பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று ஆவின் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதுபோல, விலை உயர்வை சரிகட்டும் வகையில், ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலையையும் ஆவின் நிர்வாகம் உயர்த்தி உள்ளது.

இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9,354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது.

ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. கடந்த 19.08.2019 முதல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.32 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.41 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

அதேநேரம், நுகர்வோர்களின் நலன் கருதி கடந்த 16.5.2021 முதல் அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. பால் கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், பால் நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமாகும்.

இச்சூழ்நிலையில் இடுபொருட்கள் விலையேற்றம், உற்பத்தி செலவினம் ஆகியவை கூடியுள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி, ரூ.32-லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி ரூ.41-லிருந்து ரூ.44 ஆகவும் வழங்கப்படும்

நவம்பர் 5-ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும். இந்தக் கொள்முதல் விலை உயர்வால் சுமார் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பலனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து,  ஆவின் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை சில்லறையில் வாங்கும்போது லிட்டருக்கு ரூ.12 அதிகரிக்கப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்து உள்ளது.  இனி ஒரு லிட்டர் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை ரூ.60க்கு சில்லறை கடைகளில் விற்பனை செய்யப்படும் பால் கொள்முதல் விலையை ஏற்றியதால் அதனை ஈடுக்கட்ட ஏற்பாடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஆவின் பால் விற்பனை விவரத்தில், ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து நேற்று நாளிட்ட செய்தி குறிப்பினை தொடர்ந்து, நாளை முதல் பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.32 லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.41 லிருந்து. ரூ.44 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இருப்பினும் விற்பனை விலையை பொறுத்தவரையில் நுகர்வோர்களின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk. நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk, பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி தற்போதைய நிலையே தொடரும்.

தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 46க்கே புதுப்பிக்கப்படும். சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 60 ஆக நாளை முதல் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த விலை மாற்றம் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்காக ஏற்படும் கூடுதல் செலவினத்தை பகுதியாக ஈடுசெய்யும் வகையில் நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த விலை மாற்றத்திற்கு பின்னரும் ஆவின் நிறைகொழுப்பு பால் (அட்டை) தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ. 24 குறைவு. சில்லறை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பால் தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ. 10 குறைவு. உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த விலை மாற்றம் ஏற்படுத்தபட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு நுகர்வோர்களும், சில்லறை விற்பனையாளர்களும், மொத்த விற்பனையாளர்களும் எப்போதும் போல் ஆவின் நிறுவனத்திற்கு ஒத்தழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடைய, ஆவின் ஆரஞ்சு பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி, ரூ.60 ஆக மாற்றி அமைத்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வு வழங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய, விலை உயர்த்தப்படுகிறது என்றும் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ரூ.49க்கே விலை மாற்றமின்றி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.