கோயம்புத்தூர்: கோவை கார் வெடிப்பு சம்பவம் மிகப்பெரிய சதி, தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்றும், அதிகமான சித்தர்களையும் யோகிகளையும் உருவாக்கியதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்று கோவை கல்லூரி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
கோவை பாலக்காடு சாலையில் உள்ள ஜெ.எஸ்.எஸ் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள் கட்டட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்து, கல்லூரியை பார்வையிட்டார். மேலும், அங்கு மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்த இயற்கை மருத்துவம் சார்ந்த கண்காட்சியினையும் பார்வையிடார்.
பின்னர் நிழ்ச்சியில் சிறப்புரை ஆற்றியவர், ‘நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு மேற்கத்திய கல்விமுறை சார்ந்து கற்பிக்கப்பட்டது. இதில் நல்ல விஷயங்கள் இருந்தாலும், இப்போதைக்கு தேவைப்படுகிற கல்வி முறையில் நமது கலாச்சாரம் குறித்தும் பண்பாடு குறித்தும் எடுத்துரைத்து முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கல்வி முறை இப்போது தேவைப்படுகிறது.
சனாதன தர்மம் எனும் நமது அடிப்படை கொள்கையை நாம் மறந்து விடக்கூடாது. இதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் முக்கிய பங்கு வகிப்பவை. இன்று உலகின் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணம் மனிதர்களை மையமாக வைத்து செயல்படுவது தான். இதுவே இயற்கையை அழிப்பதற்கும் காலநிலை மாற்றத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது. எனவே இயற்கையை பாதுகாக்கும் கல்வியும் மருத்துவமும் அவசியமாகிறது.
அந்த வகையில் அதிகமான சித்தர்களையும் யோகிகளையும் உருவாக்கியதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மண்ணைச் சேர்ந்த சித்தர் திருமூலர் யோகாவை பற்றி எடுத்துரைத்துள்ளார். ஆசனங்கள் என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல அது மன ஆரோக்கியத்தையும் வளர்க்கக்கூடியது. இன்று உலகமே யோக கலையை பயிற்சி செய்து வருகிறது. சர்வதேச யோகா தினத்தன்று போட்டிகள் நடத்தப்படுகிறது. நமது பாரத பிரதமரின் முன்னெடுப்பில் உலகம் முழுவதும் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலகத்திற்கே முன்னோடி தேசமாக இந்தியாவை உருவாக்கி வருகிறார். நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. இந்திய கலாச்சாரத்தையும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் குறித்த அறிவையும் வளர்க்க வேண்டியது மிகவும் முக்கியமாகும் என்றார்.
தொடர்ந்து பேசியவர், பாரதப் பிரதமரின் கனவுப்படி 2047 ஆம் ஆண்டு இந்தியா நூறாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும்போது நமது நாடு அனைத்து உலக நாடுகளுக்கும் முன்னோடியாக திகழும். நமது நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க நினைக்கும் மற்ற நாடுகள் நம் மீது பல்வேறு வகையில் தாக்குதல்களை நடத்துகின்றன. அதற்கு நாம் தக்க பதிலடி கொடுத்து வருகிறோம். இதில் முக்கியமானது தீவிரவாத தாக்குதல். இதற்கு நாம் சரியான பதிலடிகளை கொடுத்து வருகிறோம். இது போன்ற தீவிரவாத தாக்குதல்கள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளாக, எதிர் கொள்கை உடையவர்களாக எவ்வளவு விவாதம் செய்தாலும் கூச்சலிட்டாலும் தீவிரவாதத்திற்கு எதிரான ஒற்றைக் கருத்தில் நாம் இணைய வேண்டும். ஏனென்றால் தீவிரவாதிகளுக்கு நண்பர்கள் என யாரும் கிடையாது. சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூர் மாவட்டத்தில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய தாக்குதல்களை அவர்கள் திட்டமிருந்தனர். ஆனால் அது நடக்காமல் போனது. அதில் ஒரு குண்டு மட்டும் வெடித்துள்ளது. ஆனால் அவர்களின் இடத்தில் இருந்து அதிக அளவிலான வெடிகுண்டு தயாரிக்கும் மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது இது ஒரு மிகப்பெரிய சதி என்பதை உறுதி செய்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.