நாகை: இந்திய கடற்படை மீனவர்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், துப்பாக்கி குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகை இந்திய கடற்படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடந்த 15 ஆம் தேதி காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடந்த கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் விசைப்படகு மீது இந்திய கடற்படை அதிகாரிகள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மற்ற மீனவர்கள் 9 பேர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விவகாரம் சர்ச்சையானது. பாக் ஜலசந்தி அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களை நிற்க சொன்னதாகவும், ஆனால், அவர்கள் நிற்காமல் சென்றதால், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கடற்படை விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், இந்திய கடற்படை அதிகாரி கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான அதிகாரிகள் நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டுகள் துளைக்கப்பட்ட விசைப்படகில் ஆய்வு மேற்கொண்டனர். துப்பாக்கி சூடு சம்பவம் எப்படி நடந்தது? படகில் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன? படகில் ஏற்பட்டுள்ள சேதம் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தால் விசைப்படகில் குண்டுகளால் ஏற்பட்ட 47 துளைகளைக் கண்டறிந்தனர்.
தொடர்ந்து, நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 9 மீனவர்களிடம் விசாரணை நடத்திய இந்திய கடற்படை அதிகாரிகள் குண்டடிப்பட்ட மீனவரிடம் விசாரணை நடத்த மதுரை செல்ல உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.