சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு அச்சாரமிடுவதுபோல கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து கூறிய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர், இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஏதோ ஆபத்து உள்ளது என அதிர்ச்சி தெரிவித்து உள்ளது. மூத்த கம்யூ தலைவர் நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் செயலாளரும், விடுதலைப் போராட்ட வீரருமான மறைந்த ப.மாணிக்கத்தின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சி இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.  சென்னை தி.நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலமான  பாலன் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்துகொண்டு, மாணிக்கத்தின் படத்து  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம்  கோவை கார் வெடிப்புச் சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் கூறிய நல்லக்கண்ணு,  “அதில் ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்” என்றார்.

இந்தி திணிப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தி திணிப்பு கூடாது. வேண்டுமென்றே இந்தியை திணிக்கிறார்கள். இதனை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஏற்கவில்லை என கூறினார்.