டெல்லி: தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 25ஆம் தேதி ‘பகுதி சூரிய கிரகணம்’ நிகழ இருக்கிறது. இது 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்த அரிய நிகழ்வை இந்தியாவில் ஒருமணி நேரம் பார்க்க முடியும். ஆனால், வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
சூரிய கிரகணம் என்பது, பூமி மற்றும் சூரியனுக்கு இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு. அதன்படி நடப்பாண்டு, வரும் அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த சூரிய கிரகணமானது, பகுதி சூரிய கிரகணம் (partial solar eclipse) என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளார். அதாவது, சூரியனின் ஒரு பகுதியை மட்டும் சந்திரன் மறைக்கும். இந்த நிகழ்வே பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகணத்தின்போது, சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒன்றுக்கொன்று 5.1 டிகிரி கோணத்தில் சாய்ந்து காணப்படும்.
இந்த பகுதி சூரிய கிரகணம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நிகழ உள்ளது. இந்த பகுதி சூரிய கிரகணத்தின்போது சூரியனின் 65 சதவீத பகுதியை நிலவு மறைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பா, தெற்கு ஆசியா, மேற்கு ஆசியா, வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா, அட்லாண்டிக் பகுதிகளில் இருந்து பார்க்கும்போது தெரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், அக்டோபர் 25ஆம் தேதி மாலை 04:29 மணிக்கு தொடங்கி மாலை 5:57 மணிக்கு உச்சம் பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது அக்டோபர் 25 ஆம் தேதி மாலை 4:20 மணி முதல் மாலை 6:00 மணி வரை நீங்கள் அனைவரும் கிரகணத்தை பார்க்கலாம். ஆனால், சூரியனை நேரடியாகப் பார்ப்பது கண்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால், கிரகணத்தைப் பார்க்க சூரிய கண்ணாடிகள் அல்லது தொலைநோக்கிகளை பயன்படுத்த வேண்டும் என்றும்,. கிரகணத்தின் போது சூரியனை பார்க்க, சூரியனின் புற ஊதா கதிர்வீச்சை தடுக்கக்கூடிய சிறப்பு கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது டெல்லி மற்றும் மும்பையில் 44 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை தெரியும். குஜராத்தின் துவாரகா நகரில் அதிகபட்சமாக 1 மணிநேரம் 45 நிமிடங்களும், மும்பையில் 1 மணிநேரம் 19 நிமிடங்களும், ஜெய்ப்பூரில் 1 மணிநேரம் 18 நிமிடங்களும், டெல்லியில் 1 மணிநேரம் 12 நிமிடங்களும் நீடிக்கும். தமிழகத்தின் சென்னையில் 5.14 மணிக்கு ஏற்பட தொடங்கும் சூரிய கிரகணம் 30 நிமிடங்களை வரை நீடிக்கும். கொல்கத்தாவில் 11 நிமிடங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.