காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடில் உள்ள ஸ்ரீ அனந்தபுர ஏரி கோவிலை பாதுகாத்து வந்த தெய்வீக முதலையான ‘பபியா சைவ முதலை’ இன்று உயிரிழந்தது. வயது முதிர்வு காரணமாக அது மரணத்தை எய்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இது பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த கோவிலில் 150 ஆண்டுகளுக்கு மேலாக முதலை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த 75 ஆண்டுகளாக இந்த கோவிலின் ஏரியில் வாழ்ந்து வரும் ‘பபியா’ என்ற முதலை கோயில் ஏரியில் வாழ்ந்து வந்தது. கோவிலின் பாதுகாவலனாய் சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது. ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமி கோவிலின் தந்திரி வழங்கும் பிரசாதம் சாப்பிட்டு வாழ்ந்து வந்த சைவ முதலையான பபியா உயிரிழப்பு கேரள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு கோவில்களுக்கும் ஏதாவது ஒரு தனி சிறப்பு உண்டு. அதுபோல கேரள மாநில கோவில்களுக்கும் பல சிறப்புகள் உண்டு. திருவனந்த புரம் அனந்தபத்ம சாமி கோவில் சிறப்பு உலக நாடுகளிடையே வியப்பை ஏற்படுத்தியது. அதுபோல, கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கன்னூரில் அமைந்துள்ள ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமி கோவிலின் அனந்தபுரா ஆலயமும் பெரும் சிறப்பு பெற்றது.
இந்த ஆலயம் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் மூலவராக அனந்த பத்மநாப சுவாமி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த பிரதான ஆலயத்தைச் சுற்றி தலைவாயில் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. பசுமை நிலத்தில் காட்சியளிக்கும் இந்த ஆலயத்தின் குளத்தில் கடந்த 150ஆண்டுகளுக்கும் மேலாக முதலை வாழ்ந்து வருகிறது. அதற்கு இங்கு வரும் பக்தர்கள் ‘பபியா’ என்று பெயரிட்டு அழைக் கிறார்கள். இந்த முதலை ஆலயத்தின் பாதுகாவல் என்று பக்தர்கள் கருதுகின்றனர்.
பொதுவாக முதலை இனமானது அசைவ வகையைச் சார்ந்தது. ஆனால் இங்குள்ள முதலை குளத்தில் உள்ள மீன்களைக் கூட சாப்பிடுவதில்லை என்கிறார்கள். மாறாக தினமும் உச்சிகால பூஜையின் போது, சாதமும் வெல்லமும் கலந்த உருண்டைகளை, கோவில் அர்ச்சகர் இந்த முதலைக்கு சாப்பிடக் கொடுக்கிறார். இதற்கு ‘முதலி நைவேத்யா’ என்று பெயர். கோவில் குளத்தில் குளிக்க வரும் பக்தர்கள் மற்றும் உணவு கொடுக்கும் அர்ச்சகர்களை இதுவரை முதலை தாக்கியதில்லை என்பது ஆச்சரியமான ஒன்றாக பக்தர்கள் சொல்கிறார்கள். மேலும் கோவில் பிரசாதம் வழங்கப்படும் வேளைகளில், குறிப்பிட்ட இடத்திற்கு முதலை சரியாக வந்து சேர்ந்து விடுவதும் பக்தர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
இந்த கோவிலில் இந்த ஒரு முதலை மட்டுமே கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்படுவதாகவும், வேறு எந்தவொரு முதலையை யாரும் கண்டதில்லை என்று கூறப்படுகிறது. அருகில் வேறு ஆறுகளோ, குளங்களோ இல்லாத நிலையில் எப்படி இந்த கோவில் குளத்திற்குள் மட்டும் முதலை வருகிறது என்பது புரியாத புதிர் என்று பக்தர்களும், அந்த பகுதி மக்களும் கூறி வந்தனர்.
இந்த நிலையில், பபியா முதலை இன்று இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ,இதையடுத்து அந்த முதலைக்கு மாலை அணிவித்து கோவில் நிர்வாகத்தினரும், பொதுமக்களும் இறுதி மரியாதை செய்து வருகின்றனர். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.