சென்னை: தனக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சட்டக்கல்லூரிக்கு வழங்கியவர் கலைஞர் – அடிப்படை உரிமைகளை காக்க மாணவர்கள் தங்கள் படிப்பை பயன்படுத்த வேண்டும் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை பெருங்குடி அருகே தரமணியில் அமைந்துள்ள டாக்டர்.அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா கல்வெட்டை திறந்து வைத்து, வெள்ளி விழா மலரை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய ஸ்டாலின், “1989-ம் ஆண்டு, நூற்றாண்டு கண்ட சென்னை சட்டக்கல்லூரிக்கு அம்பேத்கர் என பெயர் சூட்டியவர்தான் தலைவர் கலைஞர். 1997-ம் ஆண்டு சென்னையில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியவரும் தலைவர் கலைஞர்தான் என்றவர், இந்தியாவில் சட்டப் பல்கலைக்கழகத்தை நிறுவிய முதல் மாநிலம் தமிழகம்தான். 1997-ல் கலைஞரால் தெற்காசியாவிலேயே முதல் முதலாக சட்ட பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது தான் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்.
தற்போது திமுக ஆட்சியில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழா நடைபெறுகிறது. இந்த இடம், அப்போது முதலமைச்சர் கலைஞருக்கு ஒதுக்கப்பட்ட இடம். தனக்காக ஒதுக்கப்பட்ட அரசு மாளிகையான பூம்மொழில் இல்லத்தை சட்ட கல்லூரிக்காக வழங்கியவர் கலைஞர். அதில், சட்டபடிப்புக்காக பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. தன்னலம் கருதாது பொது நோக்கிலே பல்கலைக்கழகம் தொடங்கிட, செயல்பட வழிவகை செய்தவர் கலைஞர்.
2008-ம் ஆண்டு முதல்வர் கலைஞர் தலைமையிலான அரசால் சட்டப் பல்கலைக்கழக விரிவாக்கப் பணிகளுக்கு 15 ஏக்கர் நிலபரப்பை பெருங்குடி பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு அருகில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2009-ம் ஆண்டு தாம்பரம் பகுதியில் சட்டக் கல்வி வளர்ச்சிக்கென 2 ஏக்கர் நிலம் இந்த பல்கலைக்கழகத்திற்கென முதல்வர் கலைஞர் தலைமையிலான அரசால் வழங்கப்பட்டது. இதனை உருவாக்கியது முதல் சிறிதுசிறிதாக வளர்த்தவர் தலைவர் கலைஞர்.
40 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் தற்போது 4500மாணவர்களைக் கொண்டிருக்கிறது. தற்போது 11முதுநிலை பிரிவுகளும், 5 இளங்கலைப் பிரிவுகளும் உள்ளன. 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சட்டம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகம் அரசின் சமூகநீதி கொள்கையின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
அரசு சட்டக் கல்லூரிகளின் மூலமாக இந்தியாவிலேயே மிக சீரிய முறையில், சட்டக் கல்வி கிராமப்புற மாணவர்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில், சுமார் 20 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
நமதுஅரசு அனைத்து தரப்பினருக்கும் உயர் கல்வியை கொண்டு சேர்த்திட வேண்டும் என்ற முனைப்பிலேதான், பல்வேறு சீரிய திட்டங்களை அறிவித்து அதற்கு செயல்வடிவம் கொடுத்து வருகிறது. அனைத்து மாணவர்களையும் தகுதிப்படுத்தும் வகையில்தான் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பேருந்துசேவை மாணவிகளுக்கு பெரும் உதவிகரமாக அமைந்துள்ளது.
சட்டம் படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் நீதியின் தூதுவர்களாக திகழ வேண்டும். நீதிக்கு வெற்றி தேடித்தரும் வழக்கறிஞர்களாக மாணவர்கள் விளங்க வேண்டும். அடிப்படை உரிமைகளை காக்க மாணவர்கள் தங்கள் படிப்பை பயன்படுத்த வேண்டும் என்றவர், சட்டப் பல்கலைக்கழகம் மேலும் பல சட்ட மாமேதைகளை உருவாக்க வேண்டும். வாதத்திறமையை ஏழை, எளிய மக்களின் நலன்களுக்காக பயன்படுத்த வேண்டும். அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளையும், சமூக நீதியையும் நிலைநாட்டும் வகையில் வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.