சென்னை: போதைபொருள் தனிமனிதரின் பிரச்சினை அல்ல. அது சமூகப்பிரச்னை என போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில், போதைப் பொருள் தடுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கத்தை தடுப்பது தொடர்பாக ஆட்சியர்களுடன் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “நம் முன்னால் இருக்கும் அழிவுப்பாதையான போதைப் பாதையை, நமது முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுத்தாக வேண்டும். அதற்கான உறுதியை எடுத்தாக வேண்டும். போதை மருந்துகள், நம் மாநிலத்துக்குள் நுழைவதைத் தடுத்தாக வேண்டும். அது பரவுவதை தடுத்தாக வேண்டும். விற்பனையாவதை தடுத்தாக வேண்டும். பயன்படுத்துவதை தடுத்தாக வேண்டும். பயன்படுத்துபவர்களை அதில் இருந்து மீட்டு நல்வழிப்படுத்தியாக வேண்டும். புதிதாக ஒருவர் கூட இந்த போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிடாமல் முனைப்புடன் இளைஞர் சமுதாயத்தை பாதுகாத்திட வேண்டும்.
இந்த உறுதியை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களை நம்பி ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒப்படைத்து உள்ளேன். நீங்கள்தான் அந்த உறுதியை எனக்கு வழங்கிட வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தில் குஜராத்தை விட, மகாராஷ்டிராவை விட தமிழகம் குறைவுதான் என்று நான் சமாதானம் அடையத் தயாராக இல்லை. ஒரு சிறு துளி இருந்தாலும் போதைப் பொருள் நடமாட்டம் என்பது நடமாட்டம்தான். ஒருவர் அதற்கு அடிமையானாலும் அது அவமானம்தான். எல்லாவற்றிலும் வளரும் தமிழ்நாடு – போதை போன்ற எதிர்மறையான விஷயங்களில் வளர்ந்துவிடக் கூடாது. வளர விட்டுவிடவும் கூடாது.
போதை என்பதை நல்ல பழக்கம் – கெட்ட பழக்கம் என்ற பொருளில் நான் சொல்லவில்லை. உடலுக்குக் கெடுதியானது போதைப் பொருள். அதனால் கெடுதல்தான் என்ற பொருளில் நான் சொல்கிறேன். போதைப் பொருளைப் பயன்படுத்துவதற்கு ஏதோ ஒரு காரணம் தேவைப்படுகிறது, அவ்வளவுதான். அந்தக் காரணத்தில் பொருள் உள்ளதா என்றால் இல்லை. கோடிக்கணக்கான மக்கள் தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் மட்டுமே வைத்து வாழும்போது, ஒரு சிலர் மட்டும் அது இல்லாத காரணத்தால் போதையின் பாதையில் தீர்வு கிடைக்கும் என்று சொல்வது கோழைத்தனமே தவிர வேறல்ல. போதை என்பது அதனை பயன்படுத்தும் தனிமனிதரின் பிரச்சினை அல்ல. அது சமூகப்பிரச்னை” என்று தெரிவித்தார்.