சேலம்: ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்தும் கொட்டும் நீரால், பொதுமக்கள் குளிக்க 30-வது நாளாக தடை தொடர்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அணையின் நீர்மட்டம் இன்று காலை 120.06 அடியாக உள்ளது. இதனால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீர் நிரம்பி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 88 ஆயிரத்து 834 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடி நீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 97 ஆயிரத்து 969 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டது. இந்த இரு அணைகளில் இருந்து 1 லட்சத்து 22 ஆயிரத்து 969 கனஅடி உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு பகுதியில் மழை பெய்து வருகிறது.
இதனால் காவிரியில் ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி தெரியாத அளவிற்கு பாறைகள் மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கலுக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி தெரியாத அளவிற்கு பாறைகள் மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதன் காரணமாக, ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 30-வது நாளாக தடை விதித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் வருவாய்த்துறையினர், போலீசார் காவிரி கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
அதுபோல மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120.06 அடியாக உள்ளது. இதனால் மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி அளிக்கிறது. அணையில் இருந்து இன்று காலை மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 1 லட்சத்து 7 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடியும் என மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது. காவிரியில் புரண்டோடும் வெள்ள நீரில் குளிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் அருகில் சென்று செல்பி எடுக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.