சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் உதவி ஆணையர், துணைஆணையருக்கு தலா ரூ.50ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
சென்னை வேப்பேரி அடுத்த சூளை பகுதியில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் குத்தகை விவரகாரத்தில், கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, “சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” என்று அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி சுகுமார் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், அறநிலையத்துறை மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை உதவி ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், “கோயில் சொத்தை குத்தகைக்கு எடுத்திருந்த தனி நபர்களுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி, தனி நபர்களுக்கு எதிரான நடவடிக்கையை விரைவுபடுத்த பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதாலும், சூளை சொக்கவேல் சுப்பிரமணியர் கோயில் சொத்து வாடகை பாக்கியை வசூலிக்கவில்லை என்றும் கூறி, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், உதவி ஆணையர், இணை ஆணையர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் விதித்தும் உத்தரவிட்டார். மேலும், அபராத தொகையை 2 வாரங்களில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.