டெல்லி: எதிர்க்கட்சிகள் சார்பில், குடியரசு தலைவர் தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு எதிராக பரபரப்பாக களமிறக்கப்பட்ட 84 வயதான யஷ்வந்த் சின்ஹா தோல்வி அடைந்த நிலையில், அவரை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டன. இதனால், மனம் நொந்துபோய், தன்னை யாரும் கண்டுக்கவில்லை, என்ன ஏது என்றுகூற விசாரிக்கவில்லை என்று புலம்பி உள்ளார்.
மூத்த அரசியல் தலைவரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு தற்போது 84 வயதாகிறது. பாஜக ஆதரவாளரான இவர், முன்னாள் பிரதமா்கள் சந்திர சேகா், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நிதி, வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளாா். நேர்மையானவரான சின்ஹா, மோடி அரசிலும் அமைச்சராக பதவி வகித்தார். ஆனால், மோடி அரசின் எதேச்சதிகார போக்கு ஒத்துவராத நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகியவர், பின்னர் 2021 மாா்ச் மாதத்தில் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா். அவருக்கு அக்கட்சியின் தேசிய துணைத் தலைவா் பதவி வழங்கப்பட்டது. ஆனாலும் டம்மியாக வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், ஜூன் மாதம் குடியரசுத் தலைவா் தோ்தல் அறிவிக்கப்பட்டதும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவை மம்மா களமிறக்கினார். அவரையே எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக களமிறங்கினார். அதனால் அவர் திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகினாா். ஆனால், தேர்தலின்போது, அவரை களமிறக்கிய மம்தாவே அவருக்கு ஆதரவு தர மறுத்துவிட்டார். அதுபோல சிவசேனா உள்பட பல எதிர்க்கட்சிகள் அவருக்கு ஆதரவு தருவதில் இருந்து பின்வாங்கின. இதனால், குடியரசு தலைவர் தேர்தலில் தோல்வியை தழுவினார்.
இதனால் சோர்வடைந்த யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆறுதல்கூற கூற யாரும் முன்வரவில்லை. எந்தவொரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் அவரை சந்தித்து பேசவில்லை. இதனால் விரக்தி அடைந்த சின்ஹா, தன்னை யாருமே கண்டுக்கவில்லை என்று புலம்பினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, அவரை சிலர் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சின்ஹா, இனி எந்த அரசியல் கட்சியிலும் இணையப் போவதில்லை. அதே நேரத்தில் சுந்திரமான நபராக பொது வாழ்வில் தொடா்ந்து பணியாற்றுவேன். எந்த அரசியல் கட்சியினரும் என்னிடம் இப்போது பேச்சு நடத்தவில்லை. நானும் யாருடனும் பேசவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர், தனிப்பட்ட காரணங்களுக்காக திரிணமூல் தலைவா்களுடன் இப்போதும் தொடா்பில் இருக்கிறேன் என்றார்.
பொது வாழ்வில் என்னைத் தொடா்ந்து சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ளவே விரும்புகிறேன். என்னால் என்ன செய்ய முடியும் என்பதையும் யோசித்து வருகிறேன். எனக்கு 84 வயதாகிறது. ஆனால், அதனைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னால் முடிந்த அளவுக்குப் பொதுவாழ்வில் தொடா்வேன் என்றாா்.