சென்னை: அன்புள்ள அண்ணன்… நீங்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர் செல்வத்தக்கு பதில் கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்பு வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்க கட்சி சார்பில் கடிதம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், அதிமுக தலைமைக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கு கடிதம் கொடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் ஒதுக்கும் வகையில், ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒப்புதல் வழங்கக்கோரி கடிதம் எழுதி இருந்தார். ஆனால், ஓபிஎஸ் கடிதத்தை இபிஎஸ் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்திற்கு, அதிமுக தலைமைக்கழகச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,  “கழகப் பொருளாளர் அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் 29.06.2022-ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். பின்னர், திரு.மகாலிங்கம் அவர்கள் வழியாகப் பெறப்பட்டது. கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27.06.2022 அன்று முடிவுற்ற நிலையில், இத்தனை நாட்கள் பொறுத்திருந்து, கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரப் பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், 27.06.2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மொத்தம் உள்ள 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர். 4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். தாங்கள் அந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், தற்போதைய தங்களின் இந்தக் கடிதம் ஏற்படையதாக இல்லை.

அதேபோல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையுதாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.