ராமேஸ்வரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக 2 முதியோர்கள் அகதிகளாக தமிழகம் வருகை புரிந்துள்ளனர். அவர்கள் மயக்க நிலையில், கடற்கரையில் படுத்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கிருந்து தமிழகத்திற்கு தப்பி அகதிகளாக வரும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே85 பேருக்கும் மேலானவர்கள் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை மேலும் 2 வயதான பெண்கள் இலங்கை திருகோணமலை பகுதியில் இருந்து தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் 2 பேர் பிளாஸ்டிக் படகு மூலம் ன்று அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி அடைந்துள்ளனர். அவர்களை கடற்கரையில் இறங்கிவிட்டு விட்டு படகோட்டிகள் சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் சுருண்டு விழுந்து கிடந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல்படையினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.