சென்னை: அதிமுகவில் எடப்பாடிக்கும், ஒபிஎஸ்-க்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில்,  ஓபிஎஸ் இன்று பிற்பகல மெரினா செல்ல திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் தர்மயுத்தத்தை தொடங்கப்போகிறாரோ என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் இறுதி கட்டத்திற்கு வந்து இருக்கிறது.   எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் 95 சதவீத ஆதரவு இருக்கிறது. ஓ. பன்னீர் செல்வத்திற்கு இருந்த 12 மா.செ. ஆதரவாளர்களில்  6 பேர் எடப்பாடி பக்கம் சாய்ந்து விட்டார்கள் . இதனால் 6 பேர் மட்டுமே ஆதரவு உள்ளது. இதனால், ஓபிஎஸ் நினைப்பதை பொதுக்குழுவில் சாதிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், நாளை பொதுக்குழு நடைபெறவிருக்கும் நிலையில்  அதற்கு தடை கோரி பன்னீர்செல்வம் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.  இதனால் அடுத்து என்ன செய்யலாம் என்று ஓபிஎஸ் தரப்பு ஆலோசித்து வருகிறது.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஓரங்கட்டபப்படுவதால், அவரது ஆதரவாளர்கள்  ஜெயலலிதா நினைவிடத்தில் கூடி வருகின்றனர். நேற்று ஒருவர்  தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .  இதைத்தொடர்ந்து பலர் அங்கு கூடி ஓபிஎஸ்-க்கு ஆதரவாக கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையில் இன்று காலை டிவிட் பதிவிட்டுள்ள ஓபிஎஸ், “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்று சொல்லியிருந்தார்.

இந்த சூழலில், ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வதால் மீண்டும் தர்மயுத்தம் நடத்த திட்டமிட்டு இருக்கிறாரா என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.