சென்னை கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற கல்லூரி களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழக முதல்வர் சட்டமன்றத்தில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள், கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
தற்போது இந்த திட்டத்தை அமல்படுத்த தமிழகஅரசு முயற்சி எடுத்துள்ளது. ஜூலை 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்காக அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிகளில் தற்போது உயர்கல்வியை தொடரும் மாணவிகளின் விவரங்கள் அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் மூலம் சேகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முதலாமாண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்லூரி அடையாள அட்டை, 10,12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.