சென்னை: கோடை விடுமுறை முடிந்து இன்று 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் தொடங்கி உள்ள நிலையில், மாணாவர்கள் உயர்வகுப்புகளுக்கு செல்லும் வகையில், அவர்களுக்கு உரிய டிசி (டிரான்ஸ்பர் சட்டிபிகேட்) இரு நாட்களில் வழங்கப்பட வேண்டும் என அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

தேர்ச்சி அடைந்து, 5,8, 10, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தாமதமின்றிடிசி வழங்க வேண்டும். அதே சமயம் இதர வகுப்பு மாணவர்கள் டிசி கேட்டாலும் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் அரசு பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. எட்டாம் வகுப்பு வரை புதிதாக சேர வரும் மாணவர்களிடம் டிசி இல்லாவிட்டாலும் தடையின்றி சேர்த்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இன்று பள்ளிகள் திறந்த உடன், தொடக்கப்பள்ளிகளில் 5ம் வகுப்பு, நடுநிலைப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு, உயர்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு, மேல்நிலைப்பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகளுக்கு தாமதமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கிட வேண்டும். இதர வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் தாமாக முன்வந்து மாற்றுச் சான்றிதழ் கோரினால், அவற்றைத் தடையின்றி வழங்கிட வேண்டும்.

மாற்று சான்றிதழ் வழங்கும் பணிகளை இன்றும், நாளையும் மேற்கொள்ள வேண்டும். அரசுப்பள்ளிகளில் இன்றைய தினமே மாணவர் சேர்க்கை யும் தொடங்க உள்ளதால், 8-ஆம் வகுப்பு வரை சேர முன்வரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும் அவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த மாணவர்கள் முந்தைய பள்ளிகளிடம் மாற்றுச் சான்றிதழ் பெற்று அதைச் சமர்ப்பித்த பின் முறையாகப் பதிவேட்டில் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும். மேலும் தனியார் மெட்ரிக் பள்ளிகள், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றின் கீழ் சேர முன்வரும் குழந்தைகளையும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.