சென்னை:
பிரேசிலில் நடைபெற்ற செவித்திறன் சவால் உடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.

பிரேசிலில் நடைபெற்ற 24வது கோடைகால செவித்திறன் சவால் உடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த ஜெ.அனிகா மற்றும் பிரித்வி சேகர் ஆகியோர் பங்கேற்றனர். ஜெ.அனிகா இறகு பந்து போட்டியில் ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் குழுப்போட்டி ஆகியவற்றில் பங்கேற்று 3 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினார்.

மேலும் ஆடவருக்கான டென்னிஸ் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த பிரித்வி சேகர் இரட்டையர் பிரிவு போட்டிகளில் 2 வெண்கலப்பதக்கமும் என 3 பதக்கங்கள் வென்றுள்ளனர். அவருக்கு ரூ.35 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.