சென்னை
தமிழகம் வந்த 1.15 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் குரங்கு அம்மை சோதனை செய்யப்பட்டு யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
தற்போது சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை சோதனை செய்யப்படுகிறது. நேற்று இந்த சோதனைகளைத் தமிழக சுகாதார அமைச்சர் சுப்ரமணியனும் செயலர் ராதாகிருஷ்ணனும் ஆய்வு செய்தனர். பிறகு அமைச்சர் சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அந்த சந்திப்பில் அமைச்சர், “தற்போது உலக நாடுகளைக் குரங்கு அம்மை தற்போது அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 30 நாடுகளில் 550 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நோய் குறித்து தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்துக்குக் குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்குக் கடந்த மே 20-ம் தேதி முதல் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன., கடந்த 14 நாள்களில் 1.15 லட்சம் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 90,504 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனையில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை உறுதி செய்யப்படவில்லை. முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.