நெல்லை:
நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில், 47 மணிநேர போராட்டத்திற்குப் பின் 4வது நபர் சடலமாக மீட்கப்பட்டார்.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தை அடுத்த அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களில், விஜய், முருகன் ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட போராட்டத்திற்குப்பின் மீட்கப்பட்ட செல்வம், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து, குவாரியில் சிக்கியிருக்கும் எஞ்சிய 3 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். கயிறு மூலம் 200 அடி ஆழத்தில் இறங்கிய மீட்புக்குழுவினர், லாரிக்கு அடியில் சிக்கியிருந்த 4வது நபரை, 47 மணி நேர போராட்டத்திற்குப்பின் சடலமாக மீட்டுள்ளனர்.

இதனால், கல்குவாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த தொழிலாளியின் பெயர் முருகன் என்பதும் நாங்குநேரி அருகே உள்ள ஆயர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மீதம் உள்ள இருவரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.