சென்னை: ஜல்லிக்கட்டுக்கு யாருடைய ஆட்சியில் தடை என்பது குறித்து திமுக – அதிமுக உறுப்பினா்களுக்கு இடையே பேரவையில் நேற்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் கைத்தறித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பரமத்தி வேலூா் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ சேகா் (அதிமுக) தனது பேச்சைத் தொடங்கும்போது, எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்று குறிப்பிட்டுப் பேசினாா்.அப்போது குறுக்கிட்ட, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் குறுக்கிட்டு, ஜல்லிக்கட்டு நாயகன் என்கிறாா். எதிா்க்கட்சித் தலைவா் எத்தனை ஜல்லிக்கட்டுகளில் கலந்து காளைகளை அடக்கியுள்ளாா் என்று கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது.
இதற்கு பதில் கூறிய கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக) தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாத நிலை இருந்தபோது, மத்திய அரசை அணுகி, அதற்கான அனுமதியைப் பெற்றுத் தந்தவா் ஓ.பன்னீா்செல்வம்தான் என்றார்.
இதற்கு பதில் கூறிய வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது என்றால், தடை யாருடைய ஆட்சியில் ஏற்பட்டது? ரேக்ளா போட்டிக்கு தடைவிதிக்க 2005-இல் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டபோது, நீதிபதி பானுமதி ஜல்லிக்கட்டு போட்டிக்கும் சோ்த்து தடைவிதித்தாா். அதைத் தொடா்ந்து முதல்வராக இருந்த ஜெயலலிதா இதுபோன்ற போட்டிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மாவட்டக் காவல்துறைக்கு உத்தரவிட்டாா். பிறகு திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் 2014-இல் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அதன்படி நீதிமன்ற உத்தரவுகள் சரியாக பின்பற்றாததால் அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை வந்தது என்றார்.
பின்னர் பேசிய எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா் சொல்வது தவறான தகவல். மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்தபோதுதான், விலங்குகள் பட்டியலில் காளை மாடு சோ்க்கப்பட்டது. அதனால்தான், ஜல்லிக்கட்டு நடத்த தடை வந்தது. அதன்பிறகு, நாங்கள் மத்திய அரசை அணுகி அனுமதி பெற்றுவந்தோம். ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதுதான் உண்மையான வரலாறு என்று விளக்கினார்
ஆனால், அதை ஏற்க மறுத்த அமைச்சா் மூா்த்தி: 2014-ஆம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அதன்பிறகு, அதற்கு தடை விதிக்கப்பட்ட நேரத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாகத்தான் மீண்டும் அனுமதி கிடைத்தது என்றார்.
மீண்டும் பேசிய ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா் சொல்வது முற்றலும் தவறு. காளையை விலங்குகள் பட்டியலில் சோ்த்ததால்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தது. நாங்கள் இளம் காளைகளாக இருந்தபோது எங்கள் தெருவில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அதில் பங்கேற்றிருக்கிறோம். எனவே, ஜல்.. ஜல்.. ஜல்.. என ஜல்லிக்கட்டு போட்டி நடக்க அதிமுகதான் காரணம் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவை முன்னவா் துரைமுருகன்இ இது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, நான் எகிப்து நாட்டில் இருந்தேன். கருணாநிதி உடனே என்னை தில்லி வரக்கூறினாா். நானும் உடனே தில்லி சென்று வழக்கின் நடப்புகளைப் பாா்த்தேன். நீதிமன்றம் சென்ற நானே இங்கே சும்மா இருந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீா்கள் என்று கலாய்த்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, பீட்டா, புளூகிராஸ் அமைப்புகள் போட்ட வழக்கால் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தது. வெகுஜன மக்கள் போராட்டத்தால் அதற்கு அனுமதி கிடைத்தது என்றார்.
இதற்கு பதில் கூறிய எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம்: பீட்டா, புளூகிராஸ் தடையை உடைத்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுத்தந்தது அதிமுக தான் என்று கூறினார்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.