சென்னை:  தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்களின் சேவையில் திடீர் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் அருகே தண்டவாளப் பணிகள் நடைபெறுவதால், சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

திருநெல்வேலி-நாகர்கோவில் பிரிவில் வள்ளியூர்-ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலை நடக்க இருக்கிறது. எனவே இந்த பகுதியில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் (22627/22628) ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை திருநெல்வேலி – திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

 ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (20691) திருநெல்வேலி – நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை நாகர்கோவிலில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (20692) நாகர்கோவில் – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ஏப்ரல் 24 அன்று புதுச்சேரியில் இருந்து மதியம் 12.00 மணிக்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி – கன்னியாகுமரி விரைவு ரயில் (16861) மற்றும் ஏப்ரல் 25 அன்று கன்னியாகுமரியில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட வேண்டிய கன்னியாகுமரி – புதுச்சேரி விரைவு ரயில் (16862) திருநெல்வேலி – கன்னியாகுமரி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ஏப்ரல் 28 அன்று சென்னையில் இருந்து மாலை 6.55 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (12667) மற்றும் ஏப்ரல் 29ம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் – சென்னை எழும்பூர் வாராந்திர விரைவு ரயில் திருநெல்வேலி – நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், ஏப்ரல் 29ம் தேதி கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் விரைவு ரயில் (12634) கன்னியாகுமரியில் இருந்து 45 நிமிடம் காலதாமதமாக மாலை 5.50 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.