சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டத்தின்’ பெயரை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மாற்றம் செய்து அறிவித்த உள்ளது. அதன்படி,  அதிநவீன முழு உடல் பரிசோதனை மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில்  தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் முழு உடல் பரிசோதனையானது செய்யப்படும். வெளி இடங்களில் ரூ.10ஆயிரம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அரசு ரூ.2 ஆயிரத்துக்கு முழு உடல் பரிசோதனை செய்வது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், பல அதிமுக பெயரிலான திட்டங்கள் முடக்கப்பட்டும், மாற்றப்பட்டும் வரும் நிலையில், தற்போது அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பெயர் மாற்றத்திற்கு அமமுக தலைவர் டிடிவி  தினகரன் கண்டனம் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  “சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு சிறப்பு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கு வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயரை நீக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.  தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அம்மா அவர்களின் பெயரிலான திட்டங்களை முடக்குவது அல்லது பெயர் மாற்றம் செய்வதை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறார்கள்.  முழு பௌர்ணமி நிலவாக தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் பிரகாசிக்கும் அம்மா அவர்களின் புகழை இப்படியான அற்பமான செயல்களால் மறைத்துவிட முடியாது என்பதை தி.மு.க. அரசு  புரிந்துகொள்ளவேண்டும். முழு உடல் பரிசோதனை மையத்திற்கு நீக்கப்பட்ட அம்மாவின் பெயரை மீண்டும் சூட்டிடவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.