மதுரை: 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று காலை தொடங்கியது. சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

உலகப்புகழ்பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இங்கு நடைபெறும் 12நாட்கள் சித்திரைப்பெருவிழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவைக் காண இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிவார்கள். கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதியின்றி, கோவில் வளாகத்திற்குள்ளேயே எளிமையா நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு பக்தர்கள் புடைசூழ கோலாகமாக நடைபெறுகிறது.

முதல்நாள் விழாவான இன்று மீனாட்சி அம்மன் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் தொடங்கிய சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. முற்பகல் 10:35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடி மரத்தில் இன்று கொடி ஏற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் பங்கேற்று மீனாட்சி அம்மாள் சொக்கநாதர் ஆசி பெற்றனர்.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, வருகிற 12-ஆம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், 13ஆம் தேதி திக் விஜயமும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 14ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.

ஏப்ரல் 15ந்தேதி  வெள்ளிக்கிழமை – திருத் தேரோட்டமும் (ரத உட்சவம்), ஏப்ரல் 16ந்தேதி  2022– சனிக்கிழமை – தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில்  காலை 5.50 முதல் 6.20 மணிக்குள் வைகையில் எழுந்தருள்கிறார்.  அன்று இரவு தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகிறது.

14ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண வைபவம் நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண, ரூ.200, 500 கட்டண முறையும், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசனம் முறையும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

2ஆண்டுகளுக்கு பிறகு விழாக்கோலம் பூண்ட மதுரை! சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்…