சென்னை: வண்டலூர் பூங்கா பெண் சிறுத்தை கொரோனாவால் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புறநகர் பகுதியான, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெள்ளைப் புலிகள்,  வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு, காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.

இங்குள்ள  விலங்குகளிடமும் கொரோனா பரவி இருப்பது கடந்த ஆண்டு (2021)கண்டறியப்பட்டு உள்ளது. முதன்முதலாக, வண்டலூர் பூங்காவில் இருந்த  சிங்கம் எந்தவித அறிகுறியும் இல்லாமல் 2021ம் ஆண்டு ஜூன் 3ந்தேதிபரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்குள்ள வனவிலங்குகளுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சிங்கங்கள் இறந்த பகுதியில் அடைக்கப்பட்டிருந்த மீதமிருந்த  11 சிங்கங்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்,  9 சிங்கங்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மேலும் ஒரு ஆண் சிங்கமும் மரணம் அடைந்தது. மற்ற விலங்குகள் சிகிச்சை காரணமாக உயிர்பிழைத்து. அதன்பிறகு, மிகுந்த பாதுகாப்புடன் வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 76 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து வண்டலூர் உயிரியல் பூங்கா 17ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில்,  கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஜெயா என்ற 17 வயது சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த சிறுத்தை கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், பூங்கா நிர்வாகம் அதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை.

உயிரிழந்த சிறுத்தையானது,  ஆனைமலை வனப்பகுதியிலிருந்து கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விலங்குகளுக்கும் பரவியது கொரோனா: வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா…. 1 உயிரிழப்பு