திருப்பாவை –16 ஆம் பாடல்
ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.
இன்று நாம் திருப்பாவை 16 ஆம் பாடலைக் காண்போம்
திருப்பாவை 16 :
நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ!
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!
பொருள் :
எங்கள் தலைவனான நந்தகோபாலனின் மாளிகையைக் காக்கும் காவலனே!
கொடிகள் கட்டி அழகாக விளங்கும் தோரண வாசலைக் காவல் காத்து நிற்பவனே!
ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகையின் அழகிய மணிகள் பதித்த கதவைத் திறப்பாயாக!
மாயங்கள் செய்பவனும்,கரிய நீல மணி நிறத்தனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் சிறுமுரசை பரிசாகத் தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான்.
அதனால்தான் நாங்கள் சுத்தமாகக் குளித்துக் கிளம்பிவந்திருக்கிறோம்..
அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம்.
‘அதெல்லாம் முடியாது..’, என உன் வாயால் முதலிலேயே சொல்லி,கண்ணன் கொடுத்த வரத்தை நீ உன் வாயால் மாற்றிவிடாதே.எங்கள் அன்பை பாதுகாக்கும்,இந்த நிலைக்கதவை எங்களுக்குத் திறப்பாயாக!
இதுவரை தூங்கிக்கொண்டிருந்த தோழிகளை எழுப்பிய ஆண்டாள் இந்தப் பாடலில் தன் தோழிகளுடன் நந்தகோபாலன் மாளிகைக்குச் சென்று,அங்கிருக்கும் காவலனிடம் உரையாடுகிறாள்.