சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 50ஆயிரம் இடங்களில் 15வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் உடனே எடுத்துக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியான இன்று மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதுவரை 14 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ள நிலையில், இன்று 15வது தடுப்பூசி முகாம்கள் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது.
தடுப்பூசி முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சென்னையில் மட்டும் 1600 இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் இதுவரை 87 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 63 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது
தமிழ்நாட்டில், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.