டெல்லி: 12 ராஜ்யசபா எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பார்லிமென்டில் இருந்து விஜய் சவுக் வரை பேரணி நடத்தினர். நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க எங்களுக்கு அனுமதி தரப்படுவதில்லை என ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, நாடாளுமன்ற விதிகளை மீறி, அவையில அருவறுப்பாகவும், அத்துமீறி நடந்து கொண்டதாக  நடந்து கொண்ட 12 எம்.பி.க்களை ராஜ்யசபா தலைவர் சஸ்பெண்டு செய்ததார். அதன்படி மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாயா வர்மா, ஆர். போரா, ராஜாமணி பாட்டீல், சையத் நசீர் ஹுசைன், அகிலேஷ் பிரசாத் சிங், சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. டோலா டென் உள்ளிட்ட 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் .அவர்கள் மன்னிப்பு கேட்காதவரை இடை நீக்கம் ரத்து செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது. அதுபோல, தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரிலும் சஸ்பெண்டு செய்யப்பட்ட 12 எம்.பி.க்களும் பங்குகொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சஸ்பெண்டு எம்.பி.க்கள் மன்னிப்பு கோரினால், பரிசீலிக்கப்படும் என ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு கூறி வருகிறார். ஆனால்,  மன்னிப்பு கேட்க முடியாது என எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டன.

இதுதொடர்பாக இன்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், 12 எம்.பி.க்களின்  சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை முடங்கியது.  இதையடுத்து, பேசிய அவைத்தலைவர்,  சபையில் கண்ணியம் மற்றும் அலங்காரத்தை கடைப்பிடிப்போம். கட்டுக்கடங்காத மற்றும் பார்லிமென்ட் அல்லாத நடத்தை எல்லாம் வேலை செய்யப் போவதில்லை” என்று காட்டமாக தெரிவித்துடன் அவையை 2மணி வரை ஒத்தி வைத்தார்.

இதையடுத்து அவையில் இருந்து வெளியேறிய  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சவுக் வரை பேரணி நடத்தினர். இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

பேரணியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி,  இது (12 எம்.பி.க்கள் இடைநீக்கம்) இந்திய மக்களின் குரல் நசுக்கப்பட்டதன் அடையாளமாகும். அவர்களின் குரல்கள் நசுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க எங்களுக்கு அனுமதி தர மோடி அரசு மறுக்கிறது என  குற்றம் சாட்டினார்.