சென்னை

நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.   ஏற்கனவே 17 மாநகராட்சிகள், 110 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

தற்போது புதியதாகத் தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் வார்டு எண்ணிக்கை நிர்ணயம், எல்லைகள் வரையறை போன்ற பணிகள் நடந்து வருகின்றன.    நாளை அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளனர்.   இந்த நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை வெளியாவது இறுதி வாக்காளர் பட்டியல் எனக் கூறப்படுகிறது.  ஆயினும் இந்த பட்டியலில் புதியதாகப் பெயர் சேர்க்கவோ அல்லது திருத்தம் செய்யவோ கால அவகாசம் வழங்கப்படலாம் என்னும் எதிர்பார்ப்பு வாக்காளர்கள் இடையே உள்ளது   நாளை இதுகுறித்து இறுதியாகத் தெரிய வரலாம் எனக் கூறப்படுகிறது.