சென்னை: தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் புறநகர் பகுதியான செம்மஞ்சேரி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளிலும், தாழ் வான பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் அதிகளவில் மழை பெய்து வருகிறது. தொடர்ச்சி யாக மழை பெய்த மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னை கூவம் ஆற்றின் கரையோரம் இருந்த மக்களும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களும் குடிசை மாற்று வாரியத்தால் சென்னைக்கு வெளியே ஓம்ஆர் சாலை அருகே அமைந்துள்ள செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் குடியமர்த்தப் பட்டார்கள். செம்மஞ்சேரியில் மட்டும் 6,700 குடும்பங்கள் உள்ளன.
மழை வெள்ளம் காரணமாக, தாழம்பூர், படுஊர் போன்ற ஏரிகளில் தண்ணீர் திறந்துவிட்டால் செம்மஞ்சேரி முழுவதும் வெள்ளக்காடானது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். செம்மஞ்சேரில இரண்டு அடுக்கு வீடுகள் உள்ளன. மழைத்தண்ணி கீழ் அடுக்கு வீட்டுக்குள்ள போன தால், சமைக்க முடியாமல் அரசு கொடுக்கும் உணவு வகைகளை உண்டு வருகிறார்கள்.
கொசுக்கடி, பூச்சி, புழு போன்ற பிரச்னைகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் இருக்கிறது. கழிவறை போன்ற அடிப்படை தேவைகளுக்கே பெண்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க. மேல் மாடியில் உள்ள வீட்ல கேட்டு கேட்டு பயன்படுத்துகிறார்கள். மேலும் கடந்த ஒருவாரமாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புப் பகுதி மக்களுக்காக சென்னை மாநகராட்சி சாா்பில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 10 இருக்கைகள் கொண்ட 4 நடமாடும் கழிவறை வாகனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 24 தூய்மைப் பணியாளா்கள் சுழற்சி முறையில் பணி யமா்த்தப்பட்டுள்ளனா். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு தங்க வைப்பதற்காக 2 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கும் மாநகராட்சி சாா்பில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களுக்கு ஏற்படும் சளி இருமல், காய்ச்சல் சேற்றுப்புண் ஆகிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்மஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஓக்கியம் துரைப்பாக்கம் உள்பட பல பகுதிகளுக்கு சென்று மழை வெள்ளம் குறித்து ஆய்வு செய்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்துஅவர்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கினார்.